மக்களவைத் தேர்தல்: தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
மக்களவைத் தேர்தல்: தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்!
ANI

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அன்றைய நாள் மாலை 6.30 மணிக்கு வெளியாகின. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. இண்டியா கூட்டணித் தலைவர்கள், தாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இதற்காக 40 ஆயிரம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

விளவங்கோடு சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது. 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்துக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஒடிஷாவுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in