9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3-ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
நடந்த முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் காங்கிரஸில் இணைந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மாநிலங்களவை எம்.பி. கேஷவ ராவ் மற்றும் பாஜகவில் இணைந்த ஒடிஷாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. மமதா மொஹாந்தா, தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதை அடுத்து மாநிலங்களவையில் 12 இடங்கள் காலியானது.
இதில், பீஹார், அஸ்ஸாம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 இடங்களும், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிஷா மாநிலங்களில் தலா 1 இடமும் காலியாக உள்ளன.
இந்த 12 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் செப்டம்பர் 3-ல் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தேர்தலில் பதிவான வாக்குகள் செப்டம்பர் 3 மாலை 5 மணி அளவில் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட ஆகஸ்ட் 14 முதல் 21 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அஸ்ஸாம், மத்திய பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஹரியானா, பீஹார், மஹாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய 8 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் 12 மாநிலங்களவை இடங்களில் ஏறத்தாழ 10 இடங்களை பாஜக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.