
கடந்த 2022 முதல் நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தன் பதவியை நேற்று (ஜூலை 21) ராஜினாமா செய்தார்.
இந்தியாவில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்தெடுக்கப்படும் நபர், மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார். குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், மாநிலங்களவைத் தலைவர் பதவியிடமும் தற்போது காலியாகியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளில், புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பை மாநிலங்களவைத் துணைத் தலைவர் கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பில் இருந்து அவையை வழிநடத்தி பணிகளை கவனிக்கவுள்ளார்.
அதேநேரம், குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம் முடிவதற்குள் மரணம் அல்லது ராஜினாமா காரணமாக வெற்றிடம் ஏற்பட்டால் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் குடியரசுத் தலைவராக செயல்படும்போது, அவரது கடமைகளை யார் நிறைவேற்றுவது என்பது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
அதேநேரம் புதிய குடியரசுத் துணைத் தலைவரை விரைவில் தேர்தெடுக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 35 வயதை எட்டியிருக்கவேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளில் ஆதாயம் தரக்கூடிய எந்த பதவியும் சம்மந்தப்பட்ட நபர்கள் வகிக்கக்கூடாது. அத்துடன் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான அனைத்து தகுதிகளையும் அவர்கள் பெற்றிருக்கவேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மக்களவை (543) மற்றும் மாநிலங்களவை (235) எம்.பி.க்கள் வாக்களித்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.