தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 6,986 கோடியைப் பெற்ற பாஜக

திமுக மொத்தம் பெற்ற ரூ. 656.5 கோடியில், லாட்டரி கிங் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து மட்டும் ரூ. 509 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது.
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 6,986 கோடியைப் பெற்ற பாஜக
@ECISVEEP

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள தரவுகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. எஸ்பிஐ தரப்பில் ஜூன் மாதம் வரை அவகாசம் கோரப்பட்டபோதிலும், உச்ச நீதிமன்றம் இதை நிராகரித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தத் தரவுகள் கடந்த வியாழனன்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று விசாரித்தது. அப்போது, தேர்தல் நிதி பத்திரங்களினுடைய எண்களின் விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டிருந்தபோதிலும், அதை ஏன் வெளியிடவில்லை என உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ-யிடம் வினவியது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த தரவுகளை தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தத் தரவுகளை உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் திருப்பி அளித்துள்ளது. டிஜிட்டல் வடிவிலும் தரவுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட இந்தத் தரவுகளும் தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தரவுகளில் தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் 30 வரை தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணமாக்கப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் தேதி வாரியாகக் குறிப்பிட்டுள்ளன.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நிதி திரட்டாத அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறவில்லை என்பதைக் கடிதத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவில்லை.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக 6,986 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. 2019-20 நிதியாண்டில் மட்டும் ரூ. 2,555 கோடியைப் பெற்றுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக நிதி பெற்றுள்ளது திரிணமூல் காங்கிரஸ். 1,397 கோடியை தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் திரிணமூல் பெற்றுள்ளது. காங்கிரஸ் 1,334 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

திமுக மொத்தம் பெற்ற ரூ. 656.5 கோடியில், லாட்டரி கிங் சான்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து மட்டும் ரூ. 509 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் விவரங்களைக் காண: இங்கே க்ளிக் செய்யவும்..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in