
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நாளை (ஆகஸ்ட் 17) பிற்பகல் 3 மணிக்கு புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் உள்பட அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது.
பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்னதாக, கடந்த மாதம் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஆரம்பத்தில் அது குறித்து எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீதான தனது விமர்சனத்தை கடந்த வாரம் முதல் ராகுல் காந்தி தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலின்போது மிகப்பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்ததாகவும், இது பாஜகவுக்குப் பயனளித்ததாகவும் தரவுகளுடன் அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் நாளை விளக்கமளிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.