
334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று (ஆக. 9) தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் தேர்தல் அமைப்பை செம்மைபடுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் விரிவான மற்றும் தொடர்ச்சியான உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு 2,854 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நாட்டில் இருந்த நிலையில், தற்போது 334 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டுள்ளதால் 2,520 அரசியல் கட்சிகள் எஞ்சியுள்ளன.
`தலைமை தேர்தல் அதிகாரிகள் அளித்த தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு, 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து ஆணையம் நீக்கியுள்ளது’ என தேர்தல் ஆணையத்தால் இன்று (ஆக. 9) வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், `இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தற்போது மக்கள் பிரிதிநிதிகள் சட்டம் 1951-ன் பிரிவு 29பி மற்றும் பிரிவு 29சி ஆகியவை மற்றும் வருமான வரிச் சட்டம், 1961 மற்றும் தேர்தல் சின்னங்கள் (இட ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968-ன் கீழ் தொடர்புடைய விதிகளின் கீழ் எந்த சலுகைகளையும் பெற தகுதியற்றவை’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களின்படி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.