
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் மூலம் பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளது, தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 அன்று திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம்பெறாதது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 1 வரை பிஹார் மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையை விமர்சித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எக்ஸ் தளப் பக்கத்தில் இதைக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையும் இணைத்து தனது பதிவில் விமர்சித்துள்ளார் ப. சிதம்பரம்.
"வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, மேலும் விசித்திரமடைந்து கொண்டே வருகிறது. பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழக்கும் அபாயம் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது ஆபத்தானது மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமானது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நிரந்தரமாகப் புலம்பெயர்ந்துவிட்டார்கள் என்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல் மற்றும் தமிழ்நாடு வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் அரசாங்கத்தைத் தேர்வு செய்வதற்கான உரிமையில் தலையிடும் செயல்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் எப்போதும் போல பிஹாருக்குச் (அவர்களுடைய சொந்த மாநிலம்) செல்லக் கூடாது? சத் பூஜை திருவிழாவின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பிஹாருக்குச் செல்ல மாட்டார்களா?
வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஒருவருக்கு நிலையான அல்லது நிரந்தரமான சட்டபூர்வ இல்லம் அவசியம். புலம்பெயர் தொழிலாளருக்கு பிஹாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய இல்லம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர் எப்படி தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும்? புலம்பெயர் தொழிலாளருக்கு பிஹாரில் நிரந்தர வீடு இருக்க, பிஹாரில் வாழ்ந்து வந்தால், அவர் எப்படி தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டார் என்று கருத முடியும்?
இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறது. மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறையை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்" என்று ப. சிதம்பரம் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
SIR | Bihar SIR | Election Commission | P Chidambaram | Congress | Tamil Nadu | Election Commission of India | ECI