நாடு முழுக்க அக்டோபர் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தகவல் | SIR | Special Intensive Revision |

அடிப்படையான களப் பணிகளை செப்டம்பருக்குள் நிறைவு செய்துவிடலாம் என்றும் அக்டோபரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கானப் பணிகளைத் தொடங்கிவிடலாம் என்றும்...
நாடு முழுக்க அக்டோபர் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தகவல் | SIR | Special Intensive Revision |
ANI
1 min read

நாடு முழுக்க அக்டோபர் முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி தேர்தல் ஆணையத்தால் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் சிறப்பு தீவிர திருத்தத்தால் நீக்கப்பட்டன. இதில் ஆட்சேபனை இருந்தால், அதைத் தெரிவிக்க செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து, நாடு முழுக்க வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், நாடு முழுக்க தீவிர சிறப்பு திருத்தத்தை அக்டோபர் முதல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள்:

"சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள எப்போது தயாராக முடியும் என தலைமைத் தேர்தல் அலுவலர்களிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பெரும்பாலான அலுவலர்கள், அடிப்படையான களப் பணிகளை செப்டம்பருக்குள் நிறைவு செய்துவிடலாம் என்றும் அக்டோபரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கானப் பணிகளைத் தொடங்கிவிடலாம் என்றும் பதிலளித்துள்ளார்கள்.

மூன்று மணி நேரத்துக்கும் மேல், இப்பணிகளுக்கான தயார் நிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ளும்போது, வாக்காளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கத் தேவையான ஆவணங்களைப் பட்டியலிட்டுத் தருமாறு தலைமைத் தேர்தல் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மாநிலத்துக்கு மாநிலம், இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால், இப்பட்டியல் கோரப்பட்டுள்ளது."

இதன்மூலம், நாடு முழுக்க வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடனான கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுக்க மேற்கொள்ளப்படுகிறது.

SIR | Special Intensive Revision | Voter List | Election Commission |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in