
ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக ஏற்க முடியாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 12) ஆதரித்துள்ளது.
பிஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த கருத்தை குறிப்பிட்டது.
`குடியுரிமைக்கான சான்றாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியானது. அதை சரிபார்க்கவேண்டும்’, என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
`சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதுதான் முதலில் தீர்மானிக்க வேண்டிய கேள்வி, அவர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், எல்லாம் முடிந்துவிடும். ஆனால் அவர்களிடம் அதிகாரம் இருந்தால், எந்தப் பிரச்னையும் இருக்க முடியாது,’ என்று நீதிபதி காந்த் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், வாக்காளர்களை (குறிப்பாக தேவையான படிவங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களை) நீக்குவதற்கு வழிவகுக்கும் என்று கபில் சிபல் வாதிட்டார். `2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களும் புதிய படிவங்களை நிரப்ப வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் வசிப்பிடத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் பெயர்கள் நீக்கப்படும்’ என்று அவர் கூறினார்.
`தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி 7.24 கோடி பேர் படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர், ஆனால் இறப்புகள் அல்லது இடம்பெயர்வு குறித்து முறையான விசாரணை இல்லாமல் சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்று கபில் சிபல் கூறினார்.
மேலும் `அவர்கள் (தேர்தல் ஆணையம்) எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை என்று தங்களது பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொள்கிறார்கள்’ என்றார்.
65 லட்சம் எண்ணிக்கை எவ்வாறு இறுதி செய்யப்பட்டது என்றும், இந்த எண்ணிக்கை சரிபார்க்கப்பட்ட தரவுகள் அல்லது அனுமானங்களின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டதாக என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
`உங்கள் அச்சம் கற்பனையா அல்லது உண்மையான கவலையா என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம்,’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், படிவங்களை சமர்ப்பித்தவர்கள் வரைவு பட்டியலில் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டது.
ஆதார் மற்றும் ரேஷன் அட்டையுடன் படிவத்தை வாக்காளர் சமர்ப்பித்தால் அந்த விவரங்களைச் சரிபார்க்க தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், படிவத்துடன் இடம்பெறாத ஆவணங்கள் குறித்த படிவங்களை சமர்ப்பித்தவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறதா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.