
மஹாராஷ்டிரத்தில் மெகா கூட்டணி குறித்து பிரதமர் மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என சிவசேனை தலைவரும் காபந்து முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"பிரதமர் மோடியிடம் நேற்று பேசினேன். மெகா கூட்டணி மற்றும் மஹாராஷ்டிரத்தின் திட்டத்துக்கு நான் எந்தவொரு தடையாகவும் இருக்க மாட்டேன் என அவரிடம் கூறியுள்ளேன்.
பாஜகவுக்கு எப்படி மோடியின் முடிவே இறுதியானதோ, எங்களுக்கும் அவருடைய முடிவே இறுதியானது என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு மஹாராஷ்டிர மக்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் போதும்" என்றார் ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 288 இடங்கள் கொண்ட மஹாராஷ்டிரத்தில் பாஜக 133 இடங்களிலும் சிவசேனை 57 இடங்களிலும் வெற்றி பெற்றன.
முதல்வர் யார் என்பது அனைவரும் கூடி அமர்ந்து பேசி முடிவு செய்வோம் என முடிவுகள் வெளியானபோது, மெகா கூட்டணி சார்பில் கூறப்பட்டது. எனினும், பாஜக 133 இடங்களில் வெற்றி பெற்றதால், அடுத்த முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அஜித் பவார் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு உள்ளது. இவற்றுக்கு மத்தியில் தான் ஏக்நாத் ஷிண்டே, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து காபந்து முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பில், முதல்வர் பதவிக்கு விருப்பம் இல்லை என்பதையும் ஏக்நாத் ஷிண்டே இன்று சூசகமாத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ், அஜித் பவார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை நேரில் சந்திக்கிறார்கள்.