

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட், நடிகை ஊர்வசி ரவுடேலா உட்பட பல பிரபலங்களின் ரூ. 7.93 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலியான ஒன்எக்ஸ்பெட்டில் பல பிரபலங்கள் மறைமுகமாக ஊக்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், பிரபலங்களுக்கு பல கோடி மதிப்பிலான பணம் கைமாறியதாகவும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதனடிப்படையில், நேற்று (டிச. 19) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர்கள் சோனுசூட், அங்குஷ் ஹஸ்ரா, நடிகைகள் ஊர்வசி ரவுடேலா , நேகா சர்மா உட்பட பலரது சொத்துகளைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“அமலாக்கத்துறை தலைமையக அலுவலகம், யுவராஜ் சிங், ராபின் லித்ஹாபா, ஊர்வசி ரவுடேலா, சோனு சூட், மிமி சக்ரவர்த்தி, அங்குஷ் ஹஸ்ரா மற்றும் நேஹா சர்மா ஆகியோருக்குச் சொந்தமான ரூ.7.93 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. குறிப்பாக ஒன்எக்ஸ்பெட் என்ற சட்டவிரோத வெளிநாட்டு சூதாட்ட செயலிக்கு எதிராக பல்வேறு மாநில காவல்துறை அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. அதில் குறிப்பிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு சில பிரபலங்கள் தெரிந்தே விளம்பரம் செய்ததும் மறைமுகமாக ஊக்கப்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் செயலி இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதுடன் சமூக ஊடகங்கள், காணொளிகள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் இந்திய பயனர்களை குறிவைத்து விளம்பரப்படுத்தியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோத நிதி ஆதாரத்தை மறைக்க வெளிநாட்டு இடைத்தரகர்கள் மூலம் போலி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதும் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபர் 6 அன்று கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் ரூ. 11.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்குச் சொந்தமான ரூ.7.93 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.19.07 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Enforcement Directorate (ED) has seized assets worth 7.93 Crore belonging to high-profile individuals, including cricketer Yuvraj Singh, and actors Sonu Sood and Urvashi Rautela, in connection with an illegal online betting (1xBet) case.