
பிரபல பொருளாதார வல்லுனரும், இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று (நவ.1) தில்லியில் காலமானார்.
மேகாலயா மாநிலத்தில் பிறந்த பிபேக் டெப்ராய், முதலில் தில்லி பொருளாதாரப் பள்ளியிலும், பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். கடந்த 2015 ஜனவரியில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிபேக் டெப்ராய் 2019 ஜூன் வரை அப்பதவியில் இருந்தார்.
நிதி ஆயோக்கின் உறுப்பினராக இருந்தபோது, டெப்ராயின் ஆலோசனையின் பேரில் இந்திய ரயில்வேதுறையின் சீரமைப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் நிதி ஆயோக்கின் உறுப்பினராக செயல்பட்டபோது, 2017 செப்டம்பரில் இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் பிபேக் டெப்ராய்.
இந்தியப் பொருளாதாரம் குறித்த ஆழமான அறிவைக் கொண்டிருந்த பிபேக் டெப்ராய், மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகளை இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருத்தி, அவற்றை அரசுத் திட்டங்கள் வழியாக நடைமுறைப்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று (அக்.31) இரவு 10 மணி அளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிபேக் டெப்ராய் இன்று காலை 7 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்குக் குடலில் அடைப்புப் பிரச்னை காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயக் கோளாறு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் டெப்ராய்.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பிபேக் டெப்ராய்க்கு இரங்கல் செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
`உயர்ந்த அறிஞராக இருந்த பிபேக் டெப்ராய், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு, அரசியல், ஆன்மீகம் உள்ளிட்ட பல துறைகளை நன்கு அறிந்தவர். தனது செயல்பாடுகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்’ என்றார்.