அவகாசம் தர முடியாது, இன்றிரவுக்குள் பதில் வேண்டும்: ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுக்க 150 மாவட்ட ஆட்சியர்களை அழைத்துப் பேசியதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமித் ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க ஜெய்ராம் ரமேஷ் அவகாசம் கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் இதை நிராகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுக்க 150 மாவட்ட ஆட்சியர்களை அழைத்துப் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து திங்கள்கிழமை மாலை 7 மணிக்குள் விரிவான தகவலுடன் பதிலளிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. "யார் என்று சொல்லுங்கள், சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் தண்டிப்போம். வதந்திகளைப் பரப்புவது சரியல்ல" என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இதுதொடர்பாக, விரிவாகப் பதிலளிக்க ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் ஒருவாரம் அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில், ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு விரிவாகப் பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் கோரியிருக்கிறீர்கள். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அவகாசம் கோரிய உங்களுடையக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. நீங்கள் வைத்த குற்றச்சாட்டு தொடர்புடைய ஆதாரத்துடன் விரிவான பதிலை இன்று (3.6.24) இரவு 7 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தங்களிடம் உண்மைத் தகவல் எதுவும் இல்லை என்று புரிந்துகொள்ளப்படும். தேர்தல் ஆணையம் உங்கள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in