
பிஹாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவும், நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிஹார் மாநில தலைமைச் செயலர் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
”தேர்தல் நேரத்தில் மாநில அரசுகளின் நலத்திட்ட அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகள் சார்ந்த விதிமுறைகள் மத்திய அரசுக்கும் பொருந்தும்.
அரசு மற்றும் தனியார் சொத்துகளில் இடம்பெற்றுள்ள கட்சி சார்ந்த குறியீடுகள், இழிவான வாசகங்கள் போன்றவற்றை அழிக்க வேண்டும். அரசு வாகனங்கள் அல்லது அரசு தங்குமிடங்களைக் கட்சிகளுக்காகப் பயன்படுத்துதக் கூடாது. அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
பொதுமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தனிப்பட்ட சொத்துகளில் உரிமையாளர்களின் அனுமதி இன்றி கட்சிக் கொடிகள், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு, தொலைப்பேசி எண்கள் பகிரப்பட்டுள்ளது. பதிவாகும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உடனடியாக அவற்றைத் தீர்க்கும் வகையாக 824 பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுனர். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சி விஜில் செயலியில் புகார் அளிக்கலாம்.
அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக் கூட்டங்கள் ஏற்பாட்டு விவரங்களை காவல்துறையிடம் முன்கூட்டியே தெரிவித்து, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும் உரிய முன் அனுமதிகளைப் பெற வேண்டும்.
அமைச்சர்கள் தங்கள் அரசுப் பணிக்கான வாகனங்கள், அரசு உபகரணங்கள் போன்றவற்றைத் தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் நடத்துவது தொடர்பான அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள திறந்தவெளி மைதானங்கள் மற்றும் ஹெலிபேடுகள் அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்தகைய இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது