4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: இரு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி!

கடந்த 2022-ல் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது.
4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: இரு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி!
ANI
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, அரசியல் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.

4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இரு தொகுதிகளை ஆம் ஆத்மியும், தலா ஒரு தொகுதியில் காங்கிரஸும், பாஜகவும் வென்றுள்ளன. ஒரு தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னணியில் வகித்துள்ளது.

குஜராத் – விசாவதார் மற்றும் காதி தொகுதிகள்

கடந்த 2022-ல் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

அந்த ஐந்தில் ஒரு தொகுதியாக விசாவதரின் எம்.எல்.ஏ. பூபேந்திரபாய் பயானி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த கோபால் இட்டாலியா வெற்றிபெற்றுள்ளார்.

கடி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. கர்ஷ்ன்பாய் சோலங்கி கடந்த 4 பிப்ரவரி 2025-ல் உயிரிழந்ததை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரகுமார் சாவ்டா 39,452 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

கேரளம் – நிலம்பூர் தொகுதி

கடந்த 2016-ல் இடது முன்னணி வேட்பாளராகவும், 2021-ல் இடது முன்னணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராகவும் வெற்றிபெற்ற பி.வி. அன்வர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் வயநாடு மக்களவை தொகுதிக்குள் இந்த சட்டப்பேரவை தொகுதி வருவதாலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதாலும் இந்த இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சௌகத் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் இடது முன்னணி வேட்பாளரை தோற்கடித்தார்.

பஞ்சாப் – லூதியானா மேற்கு தொகுதி

கடந்த 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.

லூதியானா மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி கடந்த ஜனவரி 11-ல் உயிரிழந்ததை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா, 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.

மேற்கு வங்கம் – காளிகஞ்ச் தொகுதி

ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நசீருதீன் அஹமத் கடந்த பிப்ரவரி 2 அன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், அவரது மகள் அலிஃபா அஹமத் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 20 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக வேட்பாளரைவிட அலிஃபா அஹமத் 50,402 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in