

பாமக தலைமை விவகாரத்தில் இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் மாம்பழச் சின்னத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்தார். அதேசமயம் பாமகவின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வருகிறார். இதையடுத்து பாமக தொண்டர்களும் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் சென்றது. அப்போது ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி மினி புஷ்கர்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தை அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார் என்றும், தனது பாமக கட்சியை அன்புமணி அபகரித்து விட்டார் என்றும், தன் தரப்பில் கொடுக்கப்பட்ட உண்மையான ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்து என்றும் ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும்" என்று கூறினார்.
அதன்பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது, ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. இது தொடர்பாக உரிமை கோருவோர், சிவில் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
The Election Commission has told the Delhi High Court that if the dispute between the two sides over the PMK leadership issue continues, the party's mango symbol will have to be suspended.