ஆதாரை அடையாளத்துக்கான ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Bihar SIR |

"ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாகாது. ஆனால்..."
உச்ச நீதிமன்றம்
ANI
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய வழக்கில் ஆதார் அட்டையை அடையாளத்துக்கான ஆவணங்களுள் ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க அல்லது நீக்குவதற்கான வழிமுறைகளில் வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தால் 11 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த 11 ஆவணங்களில் ஆதார் அட்டை இடம்பெறவில்லை. ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தார்கள். இதுதொடர்புடைய வழக்கு விசாரணையில், ஆதார் அட்டையை வாக்காளர்களின் அடையாளத்துக்கான ஆவணங்களுள் ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களுடன் கூடுதல் ஆவணமாக ஆதார் அட்டையைச் சேர்த்தது குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இத்துடன், ஆதார் அட்டையின் உண்மைத் தன்மையையும் அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றும் குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, "ஆதாரை அடையாள ஆவணமாகச் சேர்க்கச் சொல்வதில் நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை. வரைவு வாக்காளர் பட்டியலிலுள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.6% பேர் ஏற்கெனவே ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டார்கள்" என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாகாது. ஆனால், அடையாள ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என ஆதார் சட்டம், 2016 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டது.

Bihar SIR | Supreme Court | Election Commission | Supreme Court | Special Intensive Revision |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in