

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 67,000 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஈரான் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பகுதியாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியையும் தனது கட்பாடில் கொண்டுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் விளக்கம்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- “இஸ்ரேல் - ஈரான் இடையிலான இந்த மோதல், நமது எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அரசு எரிசக்தி சந்தைகளின் இருப்பு, செலவு மற்றும் அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுவதில் உறுதியாக உள்ளது. நமக்கு, இந்திய நுகர்வோரின் நலனே எப்போதும் முதன்மையான முன்னுரிமை. ஈரானின் தலைமையுடன் இந்த நேரத்தில் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளது. ஆனால், கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் ஈரானின் போர்க்கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதி
கடந்த 24 மணி நேரத்தில், நமது குடிமக்கள் சுமார் 67,000 பேர் சர்வதேச எல்லைகளை கடந்து நாடு திரும்பியுள்ளனர். நமது மக்களை மேற்கு ஆசியாவிலிருந்து திரும்ப அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தூதரகம் தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்களை தெஹ்ரானுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு மாற்ற உதவியுள்ளது. ஈரானில் வணிகம் செய்து வந்த இந்தியர்கள் ஆர்மேனியா வழியாக இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் முழுமையாக செயல்படுவதுடன், உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் இந்திய சமூகத்திற்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளோம். நாம் இரண்டு இந்திய கடல் வணிக கப்பல்களை நாம் இழந்துள்ளோம், மேலும் ஒரு கப்பல் மாயமாகியுள்ளது. இந்த தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்துகிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்ந்து பணியாற்றுகின்றனர். ஈரானிலும், படிப்பு மற்றும் வேலைக்காகச் சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்.
பேச்சுவார்த்தையே பதற்றங்களைக் குறைக்கும்
நம் எரிசக்தி பாதுகாப்பிற்கு மத்திய கிழக்கு முக்கியமானது. இது எண்ணெய் மற்றும் எரிவாயு பெறும் பல நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கிடையில் ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வருகிறது, பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. மோதல் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது, அழிவு அதிகரித்து வருகிறது. சாதாரண வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் கண்கூடாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் எழுந்துள்ள பிரச்னைகளை பிரதமர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். பிப்ரவரி 20 அன்றே நமது அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அனைத்து தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியது. ராஜதந்திர பேச்சுவார்த்தையே பதற்றங்களைக் குறைக்கும் என இந்தியா நம்புகிறது” என்றார்.
EAM Jaishankar said almost 67,000 of our nationals have crossed international borders to return...Every effort is being made to bring back our people from West Asia. The Indian Embassy has facilitated the relocation of several Indian students in Tehran to places outside. Indian nationals in Iran on business were facilitated to cross over to Armenia to return to India.