

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு அந்நாட்டின் வெளியுறவுத்துறை வலியுறுத்திய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது.
கடந்த 2024 ஜூலை இறுதியில் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக எழுந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனால் அந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவானது.
புதிதாக அமைந்த அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உட்பட ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்தது. அவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இதற்கிடையில், மக்கள் போராட்டத்தின் போது ஷேக் ஹசீனா வன்முறையைத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில் நேற்று (நவ.17) ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிராக குற்றம் செய்த குற்றவாளி என்று தீர்ப்பளித்த வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசியல் தூண்டுதலின் பேரில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்று ஷேக் ஹசீனா விமர்சித்தார். ஆனால் முகமது யுனுஸின் இடைக்கால அரசு இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் ஆகியோரை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் வங்கதேசம் வலியுறுத்தியது. நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் இதனைச் செய்ய வேண்டியது இந்தியாவின் கடமை என்று குறிப்பிட்டது. மேலும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இந்த நபர்களுக்கு, வேறு எந்த நாடும் அடைக்கலம் வழங்குவது ஒரு மிகப்பெரிய நட்பற்ற செயல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெரிவித்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியா கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அண்டை நாடு என்ற அடிப்படையில் வங்கதேச மக்களின் நலம் மற்றும் அமைதியிலும், அந்நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மை மீதும் இந்தியா உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைத்த பின்னர் அவரது சொத்துகள் மற்றும் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிய வருகிறது.
India's Ministry of External Affairs has responded to Bangladesh's request to extradite Bangladeshi former Prime Minister Sheikh Hasina, who has been sentenced to death.