
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு நடைமுறையில் முக்கிய மாற்றமாக, இ-ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தட்கல் நடைமுறையை வலுவானதாக மாற்றவும், முறைகேடுகளைத் தடுக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இ-ஆதார் வழியாக ஆதார் எண் சரி பார்த்தல் நடைமுறையை, தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தன் எக்ஸ் கணக்கில் நேற்று (ஜூன் 4) பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, `தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய பாரதிய ரயில்வே விரைவில் இ-ஆதார் சரி பார்த்தல் நடைமுறையைத் தொடங்கும். உண்மையான பயனர்களுக்கு தேவைப்படும்போது உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளைப் பெற இது உதவும்’ என்றார்.
`ஒரு மாதத்திற்கு 24 பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி கணக்கு மூலம் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தட்கல் பயணச்சீட்டிற்கு இ-ஆதார் சரி பார்த்தல் நடைமுறை அதில் புதிய மைல்கல்லாக இருக்கும்’ என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
`தட்கல் பயணச்சீட்டு முன்பதிவின் முதல் 10 நிமிடங்களில் தங்கள் கணக்குகளை ஆதாருடன் இணைத்து வைத்திருப்பவர்களுக்கு முன்பதிவு செய்ய முன்னுரிமை கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி முகவர்களுக்குக்கூட முதல் 10 நிமிடங்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடையாது’ என்று ரயில்வே அதிகாரி கூறினார்.
ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு மேற்கொள்ள தானியங்கி கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இ-ஆதார் சரி பார்த்தல் திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.