மேற்கு வங்கத்தில் குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம்

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள கானிங் பகுதியில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.
மேற்கு வங்கத்தில் குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம்
ANI

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே வன்முறை வெடித்துள்ளது.

ஜாதவ்பூர் தொகுதியிலுள்ள சதுலியா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவற்றின் தொண்டர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள ஜெய்நகர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் பெனிமாதவ்பூர் பள்ளி வாக்குச் சாவடிக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தைக் கைப்பற்றி அதை அருகிலுள்ள குளத்தில் வீசியுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விளக்கத்தை எக்ஸ் தளத்தில் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள கானிங் பகுதியில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் மோதிக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது நடைபெற்ற கல்லெறிச் சம்பவத்தில் அங்கிருந்த சில ஊடகப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்றுவரும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வர் மமதா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி ‘டையமண்ட் ஹார்பர்’ தொகுதியில் போட்டியிடுகிறார்.

8 மாநிலங்களிலுள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 40.09% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in