
நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான ஆந்திர மாநில பட்ஜெட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
18-வது மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டபேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஐந்தாவது முறையாக ஆந்திர மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 23) ஆந்திர மாநில சட்டப்பேரவையில், `கடந்த முறை ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் தவறான நிர்வாகத்தால் ஆந்திராவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போதைக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என்று பேசினார் சந்திரபாபு நாயுடு.
மேலும், `முந்தைய அரசு அமராவதியைக் கைவிடாமல் இருந்திருந்தால் அது தற்போது வளர்ச்சியடைந்த தலைநகரமாக மாறியிருக்கும். இன்று மத்திய பட்ஜெட்டில் அமராவதியின் மேம்பாட்டுக்கு ரூ. 15000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று பேசினார் சந்திரபாபு நாயுடு.
நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கு ரூ. 15000 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவில் குறிப்பிட்டபடி ஆந்திர மாநிலத்தில் பின் தங்கிய 4 ராயலசீமா மற்றும் 3 கடலோர மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 50 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இது குறித்து, `ஐசியூவில் இருந்த ஆந்திர மாநிலத்தின் நிதி நிலைமைக்கு இந்த மத்திய பட்ஜெட் ஆக்ஸிஜன் அளித்துள்ளது’ என்று கருத்து தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு.