
ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகமும் இந்திய ரயில்வேவும் ஒன்றிணைந்து முதல் முறையாக ஓடும் ரயிலில் இருந்து ஏவப்படும் அக்னி பிரைம் ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டன. ரயிலில் இருந்து ஏவப்படும் நடுத்தர ரக ஏவுகணை, 2000 கிமீ தொலைவைச் சென்று தாக்கும் திறன் படைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
”நடுத்தர தொலைவு அக்னி-பிரைம் ஏவுகணையை, ரயில் அடிப்படையிலான நடமாடும் ஏவுதள அமைப்பிலிருந்து இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது. அடுத்த தலைமுறை ஏவுகணையாகிய இது, 2,000 கி.மீ. வரையிலான தூரத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் அடிப்படையிலான நடமாடும் ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் ஏவுதல், எந்தவொரு முன் நிபந்தனைகளும் இல்லாமல் ரயில் பிணையத்தில் நகரக்கூடிய திறனைக் கொண்டது. குறைந்த நேரத்தில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவும் திறன் பெற்றதாகும்.
நடுத்தர தொலைவு அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனை, நடமாடும் ரயிலில் ஏவுகணை ஏவும் அமைப்பைக் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்துள்ளது”
என்று கூறியுள்ளார்.