
அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 6 கோடி நிவாரண உதவி வழங்கவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மருத்துவர் ஷம்ஷீர் வயலில் தெரிவித்துள்ளார்.
அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த 12 அன்று ஏர் இந்தியா விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பிஜே மருத்துவக் கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் விழுந்தது. விமானப் பயணிகள் மட்டுமில்லாமல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்த சிலரும் உயிரிழந்தார்கள்.
உயிரிழந்தவர்களில் மருத்துவ மாணவர்கள் 4 பேர், மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் ஜெய்பிரகாஷ் சௌதரி மற்றும் மானவ் படு. இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஆர்யன் ராஜ்புத் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ராகேஷ் தியோரா குஜராத்தைச் சேர்ந்தவர்.
இந்த 4 மருத்துவ மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 கோடி நிவாரண உதவி வழங்கவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மருத்துவர் ஷம்ஷீர் வயலில் தெரிவித்துள்ளார். இவர் அபுதாபியில் புர்ஜீல் ஹோல்டிங்ஸ் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். விபிஎஸ் ஹெல்த்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார்.
"உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் நால்வரும் உயிர்களைக் காக்க தயாராவதற்காக வந்தவர்கள். உயிரை இழப்பதற்காக வரவில்லை. இவர்களுடைய உயிரை ஏர் இந்தியா விமானம் 171 பறித்துச் சென்றுள்ளது. இவர்களுடைய குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 6 கோடி நிதியுதவி அளிக்கிறேன். மருத்துவக் கல்லூரி விடுதிகளில் வாழ்ந்துள்ளதால், இந்தப் படங்களைப் பார்ப்பது வேதனையளிக்கிறது" என்று மருத்துவர் ஷம்ஷீர் வயலில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.