
சமீபத்தில் மணிப்பூரில் நடந்த ட்ரோன் தாக்குதலைக் குறிப்பிட்டு 16 மாதங்களைக் கடந்தும் மணிப்பூர் வன்முறையைத் தணிக்க இரட்டை என்ஜின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அது குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
கடந்த செப்.01-ல் மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் மெய்தி மக்கள் பெரும்பான்மையாக வாழும் 2 கிராமங்களில் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் குக்கி மக்கள் வாழும் பகுதியில் இருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`வன்முறைக்குள் மணிப்பூர் மூழ்கி 16 மாதங்கள் கடந்துள்ளது. ஆனால் இரட்டை என்ஜின் அரசு அதைத் தணிக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அனைத்து சமூக மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும், அமைதியும், சகஜநிலையும் திரும்பும் வகையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மோடி ஜி அவர்களே நீங்கள் ஏன் இன்னும் மணிப்பூருக்குள் காலடி எடுத்துவைக்கவில்லை? உங்களது அகந்தையால் அனைத்து சமூக மக்களும் துன்பப்படுகின்றனர். மேற்கு இம்பால் மாவட்டத்தில் ட்ரோன்களை உபயோகித்து வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது, ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
இதுவரை குறைந்தபட்சம் 235 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கணக்கிட முடியாத அளவுக்குப் பலர் காயமடைந்துள்ளனர். 67 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளது, அதில் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுக் கொந்தளிப்புடன் இப்போது தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் மணிப்பூரில் இருக்கிறது’ என்றார்.