தேர்தலில் போட்டியிட பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

"தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் என தெற்கிலிருந்து எங்காவது போட்டியிட விருப்பம் உள்ளதா எனக் கட்சியின் தேசியத் தலைவர் கேட்டார்."
தேர்தலில் போட்டியிட பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
ANI

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்குத் தன்னிடம் பணம் இல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனப் பேச்சுகள் அடிபட்டன. எனினும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், டைம்ஸ் நௌ சேனலின் 2024-ம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமனிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

தொகுப்பாளர்: உங்களுடைய கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நிர்மலா சீதாராமனும் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா?

நிர்மலா சீதாராமன்: நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி மேலிடத்திலிருந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்னிடம் கேட்டார்கள். 10 நாள்கள் கழித்து நீண்ட யோசனைக்குப் பிறகு, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர்களிடம் கூறிவிட்டேன்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் என தெற்கிலிருந்து எங்காவது போட்டியிட விருப்பம் உள்ளதா எனக் கட்சியின் தேசியத் தலைவர் கேட்டார்.

ஆனால், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆந்திரப் பிரதேசம் அல்லது தமிழ்நாடு என எதுவாக இருந்தாலும், நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா, இந்த மதத்தைச் சேர்ந்தவரா போன்ற கேள்விகள் மூலம் வெற்றிக்கானப் பல்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துவார்கள். இவற்றையெல்லாம் என்னால் செய்ய முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார் நிர்மலா சீதாராமன்.

தொகுப்பாளர்: நாட்டின் நிதியமைச்சரிடமே தேர்தலில் போட்டியிடுவதற்கான பண பலம் இல்லையா?

நிர்மலா சீதாராமன்: பண பலம் என்பது என்னுடைய நிதிநிலை, என்னுடைய வருமானம், என்னுடைய சேமிப்பு என அனைத்தும் என்னுடையதாக இருக்கும். எதுவும் நாட்டினுடைய பணம் கிடையாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in