வதந்திகளை நம்ப வேண்டாம்: உ.பி. முதல்வர் வேண்டுகோள்

கும்பமேளா பகுதி முழுவதும் படித்துறைகள் உள்ளன, எனவே திரிவேணி சங்கமம் பகுதியை நோக்கி பக்தர்கள் செல்ல வேண்டாம்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்
முதல்வர் யோகி ஆதித்யநாத்ANI
1 min read

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் இன்று (ஜன.29) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ல் தொடங்கியது. தை (மவுனி) அமாவாசையான இன்று, புனித நீராடும் வகையில் பிரயாஜ்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதியில் அதிகாலை நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளார்கள்.

இதனால் அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

`பிரயாக்ராஜில் 8 முதல் 10 கோடி மக்கள் இன்று கூடியுள்ளார்கள். திரிவேணி சங்கமம் பகுதியை நோக்கிச் செல்ல தொடர்ந்து பக்தர்கள் முயற்சி செய்வதால் அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அக்காரா மார்க்கில் போடப்பட்டிருந்த தடுப்புகளை சில பக்தர்கள் தாண்ட முற்பட்டபோது அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று இரவு மவுனி அமாவாசை தொடங்கியுள்ளதால், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலவரம் குறித்து இதுவரை நான்கு முறை கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஆளுநர் ஆனந்திபென் படேலும் கேட்டறிந்தார்கள்.

பிரயாக்ராஜில் சூழல் கட்டுக்குள் உள்ளது, ஆனால் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பக்தர்கள் முதலில் புனித நீராடிச் சென்ற பிறகு தாங்கள் புனித நீராடிக் கொள்வதாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள் அறிவித்துள்ளார்கள். திரிவேணி சங்கம், நாக் வாசுகி மார்க், சங்கம் மார்க்கில் மக்கள் கூட்டம் அளவுக்கதிகமாக உள்ளது.

எந்த ஒரு வதந்தியையும் நம்பவேண்டாம் என்று பக்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். கும்பமேளா பகுதி முழுவதும் படித்துறைகள் உள்ளன, எனவே திரிவேணி சங்கமம் பகுதியை நோக்கி பக்தர்கள் செல்ல வேண்டாம். அருகில் இருக்கும் படித்துறையில் பக்தர்கள் புனித நீராடவேண்டும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in