இஸ்ரேல் - ஈரான் போர்: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வு |LPG Gas Cylinder |

இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு...
Domestic LPG price hiked by Rs 60, commercial cylinder up Rs 115 from March 7
இஸ்ரேல் - ஈரான் போர்: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வுANI
1 min read

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலையும் அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது. மேலும், உலக அளவில் எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் அனுமதியின்றி பயணிக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.

இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை

இதற்கிடையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இது தொடர்பாக கடந்த மார்ச் 3 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு வெளியான செய்திக் குறிப்பில் “நாடு கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய பெட்ரோலிய பொருள்களான பெட்ரோல், டீசல், விமானத்திற்கான எரிபொருள் ஆகியவற்றில் போதுமான இருப்பை வைத்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து ஏற்படக்கூடிய குறுகிய கால இடையூறுகளைச் சமாளிக்க இது போதுமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிலிண்டரின் விலை ரூ. 928.50 ஆகவும், தில்லியில் ரூ. 913 ஆகவும் உள்ளது. கொல்கத்தா,மும்பை போன்ற மற்ற பெருநகரங்களிலும் இதே போன்ற விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வணிக சிலிண்டர் விலையும் உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரைப் பொறுத்தளவில், விலை ரூ. 115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 2,043.50 ஆக உள்ளது. விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

Domestic LPG price hiked by Rs 60, commercial cylinder up Rs 115 from March 7

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in