ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களது எம்.பி பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளனர்.
நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர பிரதேச மாநில சட்டப்பேரவையின் 175 இடங்களுக்கும் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தார் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும் சட்டப்பேரவையில் 11 இடங்கள் மட்டுமே பெற்றதால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லை.
பொதுத் தேர்தலில் 164 இடங்களைக் கைப்பற்றிய தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் வெங்கடரமணா, மஸ்தான் ராவ் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தங்கரைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவர் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பலம் 11-ல் இருந்து 9-ஆகக் குறைந்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஒரு மாநிலங்களவை எம்.பி கூட இல்லை. இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்குப் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஒரு வேளை அப்படிப் போட்டியிட்டால், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு சட்டப்பேரவையில் 164 உறுப்பினர்கள் இருக்கும் காரணத்தால் இவர்கள் இருவரும் சுலபமாக மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் சில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவருகின்றன.