சில்வர் நோட்டீஸை அறிமுகம் செய்த இன்டர்போல்: இந்தியாவுக்குச் சாதகமா?

பரிசோதனை முயற்சியாக இன்டர்போல் செயல்படுத்தியுள்ள இந்தப் புதிய சில்வர் நோட்டீஸ் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.
சில்வர் நோட்டீஸை அறிமுகம் செய்த இன்டர்போல்: இந்தியாவுக்குச் சாதகமா?
1 min read

சட்டவிரோதமாக உள்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களைக் கண்டறிய, புதியதாக `சில்வர்’ நோட்டீஸை அறிமுகப்படுத்தியுள்ளது இன்டர்போல். இந்த நடைமுறை இந்தியாவுக்கு அதிகமாகப் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் செயல்படும் `இன்டர்போல்’ என்றழைக்கப்படும் சர்வதேச காவல் ஒத்துழைப்பு அமைப்பு, உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட ஒழுங்கு அமலாக்க அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறது. 8 வெவ்வேறு நிறங்களிலான நோட்டீஸ்களை தற்போது இன்டர்போல் அமைப்பு வெளியிட்டு வருகிறது.

உதாரணத்திற்கு, ஒரு நாட்டு அரசாங்கத்தால் தேடப்படும் நபர் வெளிநாட்டில் பதுங்கியிருந்தால், அவரை அங்கு வைத்து கைது செய்ய ரெட் (சிவப்பு) நோட்டீஸை வெளியிடும் இன்டர்போல். இதேபோல பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர் குறித்து எச்சரிக்கை விடுக்க ஆரஞ்சு நோட்டீஸும், ஒரு விசாரணைக் குற்றவாளி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய நீல நிற நோட்டீஸும் வெளியிடும் இன்டர்போல்.

அந்த வகையில், ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒரு நபர் அங்கு சட்டவிரோதமாகச் சம்பாதிக்கும் பணத்தை வைத்து வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதைக் கண்டறிய சில்வர் நோட்டீஸை அறிமுகப்படுத்தியுள்ளது இன்டர்போல்.

பரிசோதனை முயற்சியாக இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய சில்வர் நோட்டீஸ் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. இத்தாலி அரசின் வேண்டுகோளுக்கிணங்க முதல் சில்வர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இன்டர்போல்.

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியல் இந்திய அரசிடம் உள்ளது. அதேநேரம் இவர்களால் எவ்வளவு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்கிற பட்டியல் மத்திய அரசிடம் இல்லை. எனவே அது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள இன்டர்போலின் இந்த சில்வர் நோட்டீஸ் இந்தியாவுக்குப் பயன்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in