இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை அடுத்து நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை கடைபிடித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த மௌமிதா என்பவரின் உடல் கடந்த வாரம் மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த உடற்கூராய்வின் முடிவில் அடையாளம் தெரியாத நபர்களால் மௌமிதா கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த படுகொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும், கடந்த ஒரு வார காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணமான நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றம், மௌமிதா படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய சிபிஐ சந்தேகத்தின் பேரில் 30 நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், `ஒவ்வோரு மருத்துவமனையிலும் விமான நிலையங்களுக்கு நிகராக சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சம்களை செயல்படுத்த வேண்டும், மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் மருத்துவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை தவிர்க்க தகுந்த சட்டம் கொண்டு வர வேண்டும்’ என பல கோரிக்கைகளை இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசுக்கு வழங்கியது.
மேலும் ஆகஸ்ட் 17 காலை 6 மணி முதல், ஆகஸ்ட் 18 காலை 6 மணி வரை, நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்திய மருத்துவ சங்கம்.
இதை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள். ஆனால் மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் மட்டும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.