ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் நடந்த பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிவரும் இளநிலை மருத்துவர்கள் இன்று (செப்.16) மாலை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.
முதல்வர் மமதா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று இளநிலை மருத்துவர்கள் விடுத்த கோரிக்கைக்கு மேற்கு வங்க அரசு ஒப்புக்கொள்ளாததால், கடந்த செப்.14-ல் மருத்துவர்களுக்கும், மமதா பானர்ஜிக்கும் இடையே அவரது இல்லத்தில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தி வரும் இளநிலை மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதிய மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் பண்ட், `ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக மாண்புமிகு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உங்கள் பிரதிநிதிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். திறந்த மனதுடன் முதல்வரின் காளிகாட் இல்லத்துக்கு வந்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அழைக்கிறோம்’ என்று எழுதியிருந்தார்.
இதை அடுத்து போராட்டம் நடத்தி வரும் இளநிலை மருத்துவர்கள் சார்பாக அவர்களது பிரதிநிதிகள் இன்று மாலை முதல்வர் மமதா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் வைத்து அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
`இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணைக்கு முன்பு உங்களைச் (மருத்துவர்கள்) சந்திக்க விரும்புவது நீதிமன்றத்துக்கு முன் நல்ல பிள்ளைபோல் நடந்துகொள்வதற்கான முயற்சியாகும். இந்தச் சந்திப்பை அரசியல்ரீதியிலான முறையில் சாதகமாக அவர் (மமதா) பயன்படுத்திக்கொள்வார்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பாஜக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமித் மால்வியா.