
மத்திய இணை அமைச்சர் எல். முருகனை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு உரையாற்றிக்கொண்டிருந்தார். இவரது உரையின்போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டார். இதில் ஆத்திரமடைந்த டி.ஆர். பாலு, "நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள், தயவு செய்து அமருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர். அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்" என்று விமர்சித்தார்.
டி.ஆர். பாலு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறியதாவது:
"பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரைத் தகுதியற்றவர் என்று கூறுவது சரியல்ல. இது தலித்துகளுக்கான அவமரியாதை."
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது:
"டி.ஆர். பாலு கேள்வியெழுப்பிக்கொண்டிருந்தார். எங்களுடைய அமைச்சரவையிலிருந்த தலித் அமைச்சர் ஒருவர் எழுந்து நின்று சம்பந்தம் இல்லாத கேள்வியை எழுப்புவதாகக் கூறினார். இதற்காக அவரை தகுதியற்றவர் என்று அழைக்கிறீர்கள். அவர் தலித். பட்டியலின சமூகத்திலிருந்து வந்திருக்கக் கூடியவர். அவரை டி.ஆர். பாலு தகுதியற்றவர் என்றார். இது தலித் சமூகத்துக்கு நேர்ந்த அவமரியாதை. டி.ஆர். பாலு மன்னிப்புக் கேட்க வேண்டும்."
மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.