
கர்நாடக முதல்வராக டிகே சிவகுமார் பொறுப்பேற்கலாம் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். இந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர் பாட்டில் வீட்டுவசதித் துறையின் ஊழல் குறித்து பேசினார். மற்றொரு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜு காகே சீர்குலைந்த நிர்வாகப் பிரச்னையை எழுப்பினார்.
இந்தப் பிரச்னைகளுக்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா இரு நாள் பயணமாக திங்கள்கிழமை பெங்களூரு வருகிறார். கட்சிக்குள் நிலவும் பிரச்னைகளை சரி செய்வதற்காக இவர் பெங்களூரு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில தலைவர்களை தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசில் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருவதால், இதற்கானத் தீர்வைக் காண்பதிலும் சுர்ஜேவாலாவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் இக்பால் ஹூசைன் கூறுகையில், "ஆட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. கட்சி மேலிடத்தின் எண்ணத்தில் இது இருப்பதாகத் தெரிகிறது. சரியான தருணத்தில் டிகே சிவகுமாருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும். இது இந்த ஆண்டு நிகழும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் இதற்கான முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார் அவர்.
கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவல் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் இவ்வாறு பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.