
காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அவை நடவடிக்கையின்போது, கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
குறிப்பாக, `மாநிலங்களவையை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நடத்துகிறாரா அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்துகிறாரா’ என்று கேள்வி எழுப்பினார்.
`நமது முந்தைய தலைவர்கள்கூட கூட்டத்தொடரை சீர்குலைப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறி வந்தனர். ஆனால் இன்று இந்த சபையை யார் நடத்துகிறார்கள் என்று நான் உங்களிடம் கேட்கிறேன் - நீங்களோ அல்லது அமித் ஷாவோ?’ என்று கார்கே மாநிலங்களவை துணைத் தலைவரை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.
அவரது இந்த கருத்து ஆளுங்கட்சி வரிசையில் இருந்து கடுமையான கண்டிப்பைத் தூண்டியது. மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததில் இருந்து அவை நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி வரும் ஹரிவன்ஷ் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை `முற்றிலும் தவறானது’ என்று கூறிய ஹரிவன்ஷ், `சி.ஐ.எஸ்.எஃப். பணியாளர்கள் யாரும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மார்ஷல்கள் மட்டுமே அவைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்’ என்று விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் மாநிலங்களவையில் மேற்கொண்ட போராட்டங்களின்போது துணை ராணுவப் படைகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள், அவையின் மையப்பகுதி வரை நுழைந்ததாகக் குறிப்பிட்டு அது குறித்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி, மாநிலங்களவை துணைத் தலைவருக்கு முன்னதாக கார்கே கடிதம் எழுதியிருந்தார்.