
தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்படுவது அவமரியாதை மற்றும் அநாகரிகமாக செயலாக இருக்கும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஞானேஷ்வர் நியமனத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும், கூட்டம் நிறைவடைந்து சில மணி நேரங்களிலேயே புதிய தேர்தல் ஆணையராக ஞானேஷ்வர் நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
தேர்வுக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளிப்படுத்திய எதிர்ப்புக் கடிதத்தை சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
"தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மார்ச் 2, 2023-ல் உத்தரவிட்டது.
தேர்தல் நடைமுறைகளின் கண்ணியம் மீது வாக்காளர்கள் மத்தியில் இருந்த கவலையின் வெளிப்பாடாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தது.
துரதிருஷ்டவசமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மாண்பை மீறும் வகையில் ஆகஸ்ட் 2023-ல் இந்திய அரசு சட்டத்தை அறிமுகம் செய்தது. அந்தச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய கேபினட் அமைச்சர் ஒருவர் இடம்பெறும் வகையில் தேர்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டது.
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை பிப்ரவரி 19 அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. இதற்கு 48 மணி நேரத்துக்கும் குறைவாகவே உள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு முன்பு அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் தேர்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும் முன், தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர்வது அவமரியாதை மற்றும் அநாகரிகமானது" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.