
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு இடையே சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜூனை சந்தித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பதற்றத்தைக் குறைப்பதற்கும், அரசுரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும், நான்கு அம்ச திட்டத்தை ராஜ்நாத் சிங் பரிந்துரைத்ததாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் முன்மொழிந்த நான்கு அம்ச திட்டத்தில் இடம்பெற்றுள்ளவை,
1) எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க 2024-ல் இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தைப் பின்பற்றுதல்,
2) பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுதல்,
3) எல்லைப் பகுதியில் எல்லை நிர்ணயம் செய்யவும் அதற்கான இலக்கை அடைவதற்கான முயற்சிகளையும் விரைவுபடுத்துதல் மற்றும்
4) இரு நாடுகளுக்கு இடையே வேறுபாடுகளை தீர்க்கவும் உறவுகளை மேம்படுத்தவும் தற்போதுள்ள சிறப்பு பிரதிநிதி வழிமுறையை பயன்படுத்துதல்.
சீன அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் ஆதரவுடன் நிகழ்த்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். இத்தகைய சூழலில், பயங்கரவாத பிரச்னைக்கு எதிரான இந்தியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாடுதான் ஆபரேஷன் சிந்தூர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான படத்தை தன் எக்ஸ் கணக்கில் பகிர்ந்த ராஜ்நாத் சிங், `இந்தியாவும், சீனாவும் இராஜதந்திர உறவுகளில் நேர்மறையான நிலைப்பாட்டை பின்பற்றவேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சுமார் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து அவருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மதுபனி ஓவியத்தை சீனா அமைச்சருக்கு ராஜ்நாத் சிங் பரிசளித்துள்ளார்.