சக்தித் திருமகன் திருட்டுக் கதையா?: இயக்குநர் அருண் பிரபு விளக்கம் | Arun Prabhu | Shakthi Thirumagan |

"என் கதையை டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியதற்கான சான்று இருக்கிறது. சக்தித் திருமகனின் இயக்குநர் தனது முதல் படத்தை அவர்களுக்குதான் செய்தார்."
Director Arun Prabhu responds to Shakthi Thirumagan's Plagiarism controversy
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 19 அன்று வெளியானது சக்தித் திருமகன்.
2 min read

சக்தித் திருமகன் கதை திருட்டுக் கதை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு அதை மறுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 19 அன்று வெளியான படம் சக்தித் திருமகன். திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அக்டோபர் 24 அன்று ஓடிடியில் வெளியானது.

ஓடிடியில் வெளியான பிறகும், இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாராட்டு மழையில் நனைத்து முடிப்பதற்குள் படத்தைப் பற்றி பிரச்னை எழுந்துவிட்டது.

சக்தித் திருமகன் கதை திருட்டுக் கதை என எழுத்தாளர் சுபாஷ் சுந்தர் இரு நாள்களுக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் குற்றம்சாட்டினார். இந்தப் பதிவுடன் தனது கதையைப் பதிவு செய்து வைத்துள்ளதற்கான ஆதாரங்களையும் அவர் இணைத்துள்ளார்.

"எந்தப் பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரட்கரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 2 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் "தலைவன்".

என் கதையை டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியதற்கான சான்று இருக்கிறது. சக்தித் திருமகனின் இயக்குநர் தனது முதல் படத்தை அவர்களுக்குதான் செய்தார். கதை இலாகா என்கிற பெயரில், புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள். அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

சுபாஷ் சுந்தரின் பதிவு சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பேசுபொருளானது. இந்நிலையில் இயக்குநர் அருண் பிரபு இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.

"2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை தான் சக்தித் திருமகன், பராசக்தி என்ற தலைப்பில் கிட்டு என்ற கதாபாத்திரமும், அவன் தலைமைச் செயலகத்தில் தரகர் வேலையில் ஈடுபடுபவன் என்பதும், பெரியாரிஸ்ட் சுவரெழுத்து சுப்பையாவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் - மக்களைக் கேள்வி கேட்க தூண்டுகிறான் என்பதும், எட்ட முடியாத இடத்தில் இருக்கும் ஒரு பலம் பெற்ற வில்லனும் - அப்போதே எழுதப்பட்டது. காலசூழலுக்கேற்ப அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப - திரைக்கதையை முடித்து பல போராட்டங்களுக்குப் பின் இன்று தான் 2025-ல் அது மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.

சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் சக்தித் திருமகன் திருட்டுக் கதை எனவும் அது 2022-லேயே எழுதப்பட்ட இன்னொருவரின் கதை என்றும் யாரோ சொல்லியிருக்கிறார். மேலும், அவர் 2022-ல் டிரீம் வாரியர் பிக்சர்ஸுக்குக் கொடுத்த கதைச் சுருக்கத்தைத் திருடி எழுதப்பட்டதே சக்தித் திருமகன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு.

2014-ம் ஆம் ஆண்டிலிருந்தே இத்திரைக்கதை தொடர்பாக என்னிடம் எல்லா சாட்சியங்களும் உள்ளன. மின்னஞ்சல் பகிர்வுகள், தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு அனுப்பிய திரைக்கதைப் பகிர்வுகள், பதிவுச் சான்றிதழ்கள், வீடியோ ஆடியோ பதிவுகள் முதலிய ஆவணங்கள், நான் திரைத்துறையில் இந்தக் கதையைப் பல காலகட்டங்களில் கூறிய முன்னணி நடிகர்கள், என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் என்று பலருக்கு இது நன்கு தெரியும். இவை அனைத்துமே 2022-க்கு முன்பே நடந்தவை. அனைத்துக்கும் அனைவரிடமிருந்தும் சாட்சிகள் உள்ளன.

ஒரு படத்தை எடுப்பது மிகமிக கடினம். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இதுபோன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேற்கொண்டு இதில், தெளிவோ ஆதாரங்களோ வேண்டுமெனில் தேவையான முறையான இடத்தில் மட்டுமே சமர்ப்பிப்பது நன்று என்று தோன்றுகிறது. மக்களும், பத்திரிகை/ஊடக/ சமூக வலைத்தள நண்பர்களும் என் தரப்பு கருத்தினை அறிந்து கொள்ளவே, இப்பதிவு. இந்த சர்ச்சை பதிவுகளுக்கும் சதி அவதூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்னொருவர் கதையை, திரைக்கதையைத் திருடி எழுத வேண்டிய இயலாமை எனக்கில்லை. தொடர்ந்து ஆதரிப்போருக்கு நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. எங்கள் படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்" என்று இயக்குநர் அருண் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Director Arun Prabhu responds to Shakthi Thirumagan's Plagiarism controversy with evidence.

Shakthi Thirumagan | Arun Prabhu | Vijay Antony | Subas Sundar | Story Theft |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in