
வக்ஃபு சொத்து விவகாரத்தில் தங்களையும் தங்களுடைய சொத்துகளையும் தான் பாதுகாப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். மசோதா மீது நள்ளிரவு வரை நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவானது மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் 12 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும் எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். இதன்மூலம், மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் ஒப்புதல் அளித்ததன் மூலம், இது சட்டமானது. இதுதொடர்பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில் ஜெயின் சமூகத்தினர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மமதா பானர்ஜி, வக்ஃபு சட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.
"வக்ஃபு சொத்து விவகாரத்தில் நீங்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்பது தெரியும். மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் அரசியலுக்கு இடமில்லை என்பதை நம்புங்கள். உங்களையும் உங்களுடைய சொத்தையும் மமதா பானர்ஜி பாதுகாப்பார் என்பதை நம்புங்கள். வாழு வாழ விடு என்கிற செய்தியை நீங்கள் உணர்த்த வேண்டும். மேற்கு வங்கத்தில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது நம் கடமை.
அரசியல் ரீதியாக ஒன்றிணைய உங்களை யாரேனும் தூண்டினால், அதைச் செய்ய வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால், உலகை ஆழலாம். வங்கதேசத்தில் நிலவும் நிலைமையைப் பாருங்கள். வக்ஃபு சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடாது" என்றார் மமதா பானர்ஜி.