காவல் துறை மறுத்தும் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டதா?: புதிய கடிதத்தால் சர்ச்சை!

"பாதுகாப்பு அதிகாரிகள் குறைவாக இருப்பதால், பந்தோபஸ்து கொடுப்பது பிரச்னையாக இருக்கும்."
காவல் துறை மறுத்தும் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டதா?: புதிய கடிதத்தால் சர்ச்சை!
1 min read

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூரு வந்த ஆர்சிபி வீரர்கள் விதான் சௌதாவில் கௌரவிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, வீரர்கள் அனைவரும் சின்னசாமி மைதானத்துக்குச் சென்றார்கள்.

இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தின் முன் கூடியதால், கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக, பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் உள்பட 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். உளவுத் துறை ஏடிஜிபி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆர்சிபியின் முக்கிய நிர்வாகி நிகில் சோசாலே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு கொடுக்க முடியாது என காவல் துறை தரப்பில் முன்பே அரசிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும் அதையும் மீறியே ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கர்நாடக காவல் துறையிலிருந்து தகவலறிந்த வட்டாரங்கள் மூலம், வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது தொடர்புடைய கடிதத்தை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலருக்கு டிசிபி கரிபசாவனா (விதான் சௌதா பாதுகாப்பு) எழுதிய கடிதத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் வரக்கூடும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் குறைவாக இருப்பதால், பந்தோபஸ்து கொடுப்பது பிரச்னையாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. விதான் சௌதாவில் ஆர்சிபி வீரர்களைக் கௌரவிப்பது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை கருத்து கேட்டிருந்ததற்கு டிசிபி இவ்வாறு பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த எச்சரிக்கையையும் மீறியே வெற்றிக் கொண்டாட்டம் திட்டமிட்டபடி அரங்கேறியிருக்கிறது. ஆங்கில ஊடகச் செய்திகளின்படி, அரசு வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி, டிசிபியின் அந்தக் கடிதம் பெங்களூரு காவல் ஆணையராக இருந்த தயானந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதை தலைமைச் செயலர் ஷாலினி ராஜ்னீஷுக்கு அனுப்பியிருக்கிறார். இருந்தபோதிலும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கடித விவகாரம் வரும் நாள்களில் பெரும் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in