பிஎம் ஸ்ரீ திட்டம்: மக்களவையில் நடந்தது என்ன?

நாகரிகமற்றவர்கள் என்ற அழைத்ததைத் திரும்பப் பெற்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
பிஎம் ஸ்ரீ திட்டம்: மக்களவையில் நடந்தது என்ன?
ANI
1 min read

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாமல் இருப்பது தொடர்பாக மக்களவையில் பேசினார்.

"திமுகவினரிடம் நேர்மை இல்லை. அவர்களுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் மீது அக்கறை இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். மொழி சார்ந்த தடைகளை உருவாக்குவது மட்டும்தான் அவர்களுடைய வேலை. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஜனநாயகமற்ற, நாகரிகமற்றவர்களாக உள்ளார்கள்.

பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு தமிழ்நாடு ஒப்புக்கொண்டது. தொடக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புக்கொண்டார். திடீரென தமிழ்நாடு முடிவை மாற்றிக்கொண்டது. அவர்கள் வெறும் அரசியல் செய்கிறார்கள்" என்றார் தர்மேந்திர பிரதான்.

நாகரிகமற்றவர்கள் என்ற சொல்லை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயன்படுத்தியதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களை அமைச்சர் (தர்மேந்திர பிரதான்) நாகரிகமற்றவர்கள் என்று கூறியிருப்பது மிகுந்த வலியும், வேதனையும் தருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் எங்களுக்குப் பிரச்னைகள் இருப்பதாகவும் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் மத்திய அரசுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். தமிழ்நாடு மக்களால் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையில் தங்களுக்குப் பிரச்னை இருப்பதாகவும் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்" என்றார் கனிமொழி.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகரிகமற்றவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதைத் திரும்பப் பெற்றார்.

நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான் கூறுகையில், "மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஒரு மாதிரியான சமாதானமும் எட்டப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டால், பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதியை விடுவிக்க எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழ்மொழி தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கும். உங்களுக்கு இதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது? எனக்குப் புரியவில்லை. பஞ்சாப், கர்நாடகம், மஹாராஷ்டிரம் பிஎம் ஸ்ரீ மற்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துகின்றன. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை. அவர்கள் வெறும் அரசியல் செய்கிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in