தர்மேந்திர பிரதான் vs அன்பில் மகேஸ்: பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதா தமிழ்நாடு?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்ட வரியும் இடம்பெற்றுள்ளது, அன்பில் மகேஸ் குறிப்பிட்ட வரியும் இடம்பெற்றுள்ளது.
தர்மேந்திர பிரதான் vs அன்பில் மகேஸ்:  பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதா தமிழ்நாடு?
படம்: https://x.com/Anbil_Mahesh |https://x.com/dpradhanbjp
1 min read

பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டம். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இவை மேம்படுத்தப்படும். 2022-23-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை, 2026-27-க்குள் முழுமையாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்.

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

ஆனால், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆரம்பத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது என்பது மத்திய அரசின் வாதமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குழு அமைத்து முடிவைத் தெரிவிப்போம் என்று தான் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம் என்பதைத் தொடர்ந்து வாதாடி வருகிறது.

மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தைப் பகிர்ந்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் எக்ஸ் தளப் பதிவு:

"பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்துகிறேன் என திமுக எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் என்னைக் குற்றம்சாட்டினார்கள்.

நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மார்ச் 15, 2024-ல் அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை இங்கு பகிர்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்த கடிதம், தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா அனுப்பிய கடிதம். இந்தக் கடிதத்தில், "தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரியைக் குறிப்பிட்டுதான் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தப் பதிவைப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளப் பதிவு

"எங்களுடைய நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் எதுவும் இல்லை. மார்ச் 15, 2024-ல் அனுப்பிய கடிதம் தேசிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதல் கிடையாது. அன்றைய தேதியில் அனுப்பப்பட்ட கடிதத்தில், 'ஒரு குழு அமைக்கப்படும். குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்' என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது" என்று அன்பில் மகேஸ் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்ட வரியும் இடம்பெற்றுள்ளது, அன்பில் மகேஸ் குறிப்பிட்ட வரியும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in