பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | Dharmendra |

வீட்டில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர் இன்று மதியம் காலமானார்...
பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
1 min read

பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தின் நஸ்ராலி கிராமத்தில் டிசம்பர் 8 1935-ல் பிறந்தவர் தர்மேந்திரா. ஆரம்பத்தில் நாடக நடிகராக வாழ்வைத் தொடங்கிய தர்மேந்திரா, ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற நாடகத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ல் 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987 -ல் அவர் நடித்து 9 படங்கள் வெளியாகின. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.

குறிப்பாக 1975-ல் அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்து வெளியான `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்றார் தர்மேந்திரா

'ஆயி மிலன் கி பேலா', 'ஃபூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா', 'ராஜா ஜானி', 'ஜுக்னு', 'யாதோன் கி பாராத்', 'தோஸ்த்', 'பிரதிக்ஞா', 'சரஸ்', 'தரம் வீர்' போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்தார் தர்மேந்திரா.

1997-ல் ஹிந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். வயதான போதிலும், தர்மேந்திரா தொடர்ந்து படங்களில் பணியாற்றினார் கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்திருந்தார். இதுவரை தர்மேந்திரா சுமார் 300 படங்களில் நடித்துள்ளார் தர்மேந்திரா.

சமீப காலமாக உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர் இன்று மதியம் காலமானார். இவரது மனைவி பிரபல நடிகை ஹேமாமாலினி.

அவரது மறைவுச் செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:-

“தர்மேந்திரா அவர்களின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் மிகச் சிறந்த திரை ஆளுமை, அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வசீகரத்தையும் ஆழத்தையும் கொண்டு வந்த அற்புதமான நடிகர். அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் எண்ணற்ற மக்களை கவர்ந்தது. தர்மேந்திரா அவரது எளிமை, பணிவுக்காக போற்றப்படுகிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in