
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கூட்டு அடக்கம் வழக்கில் புதிய திருப்பமாக, கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பொய்யான தகவல்களை வழங்கி தவறாக வழிநடத்தியதற்காக, புகாரளித்த நபர் இன்று (ஆக. 23) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தன்னை தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தின் முன்னாள் துப்புரவுப் பணியாளர் என்று கூறி, பல இடங்களில் 70–80 உடல்களை புதைத்ததாக புகாரளித்த நபர் குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று (ஆக. 22) இரவு தொடங்கி இன்று காலை 6 மணி வரை விசாரிக்கப்பட்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து ஆரம்பத்தில் புகார்தாரர் ஒரு மண்டை ஓட்டை தோண்டி எடுத்தார். இந்த மண்டை ஓடு போலியானது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அவர் பொய் சாட்சியம் அளித்தது மற்றும் தவறான ஆதாரங்களை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1998 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் பல சிறார்களையும், பெண்களையும் புதைத்ததாக அவர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கூறி 15 இடங்களை அடையாளம் காண்பித்தார். ஆனால் ஒட்டுமொத்தமாக 6வது இடத்தில் மட்டும் ஒரு ஆணின் எலும்புகள் கண்டறியப்பட்டன.
அண்மையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்தால், அவர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.