
கர்நாடகத்தின் தர்மஸ்தலாவில் சட்டவிரோதமான முறையில் மனித உடல்கள் புதைக்கப்பட்ட வழக்கில் அடையாளம் காணப்பட்ட 2-வது இடத்தில், மனித எச்சங்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தகவலை காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தற்போது மூன்றாவது இடத்தில் தோண்டத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
1995 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றியபோது, கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள பகுதிகளில் புதைக்க மற்றும் எரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் ஒரு நபர் வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர், ஒட்டுமொத்தமாக 15 இடங்களை அடையாளம் கண்டுள்ளார். இதன் அடிப்படையில் வாக்குமூலம் அளித்தவர் முன்னிலையில், நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள முதல் இடத்தில் நேற்று தோண்டப்பட்டது.
சம்மந்தப்பட்ட இடத்தில் தோண்டத் தொடங்கியதும் நீர் கசிவை எதிர்கொண்ட பிறகு, ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மேற்கொண்ட இந்த கூட்டு முயற்சியில், மனித எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தோண்டப்பட்டபோதும் எதுவும் கிடைக்கப்பெறாததால், மூன்றாவது இடத்தை நோக்கி குழு நகர்ந்துள்ளது.
15 இடங்களில், 8 இடங்கள் நேத்ராவதி ஆற்றங்கரையிலும், 4 இடங்கள் ஆற்றுக்கு அருகே அமைந்திருக்கும் நெடுஞ்சாலைக்கு அருகிலும் உள்ளன. ஒரு இடம் நேத்ராவதியை ஆஜுகுரியுடன் இணைக்கும் சாலையிலும், மீதமுள்ள இரு இடங்கள் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள கன்னியாடி பகுதியிலும் உள்ளன.