
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து, விரைவில் அதை ஏற்கவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரிக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள் முன்பாக உரையாற்றினார்.
`மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2020 தேசிய கல்விக் கொள்கை, முழுமையான வளர்ச்சியை ஊக்குவித்தல், திறமை மற்றும் பன்முகத்தன்மையைப் பயன்படுத்துதல், அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
நாட்டின் பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்கள் தங்கள் முடிவை மறுபரீசனை செய்ய வேண்டும்’ என்றார்.
மொழியை முன்வைத்து மேற்கொள்ளப்படும் பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய குடியரசுத் துணைத் தலைவர், `மொழி ஒற்றுமையை வளர்த்தெடுக்கும். பிரிவினையும், மொழியைக் கற்பதும் வெவ்வேறானவை. மொழிகளை முன்வைத்து எவ்வாறு நம்மை பிரிக்க முடியும்? மொழிகள் என்று வரும்போது உலகில் வேறு எந்த நாடும் நமது பாரதத்தைப்போல இத்தனை வளமானதாக இல்லை’ என்றார்.
பதினொரு இந்திய செம்மொழிகளையும், 22 அதிகாரபூர்வ மொழிகளையும் பட்டியலிட்ட ஜகதீப் தன்கர், மொழியியல் பெருமை என்பது பிளவுபடுத்தும் சக்தியாக அல்ல, ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
சனாதன தர்மம் குறித்து தன் பேச்சில் அடிக்கோடிட்ட குடியரசுத் துணைத் தலைவர், `ஒரு பொதுவான, உயர்ந்த நோக்கத்திற்காக ஒன்று சேர நமக்கு சனாதன தர்மம் கற்பிக்கிறது. சனாதன பெருமை மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது இழந்தவை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன’ என்றார்.