

விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்துவது குறித்து கடுமையான விதிகளை உருவாக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
உலக அளவில் விமான விபத்துகள், விமானங்களில் கோளாறு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட ஏர் இந்தியா விமான விபத்து நடந்து, 200க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனா். இதனாலேயே விமானங்களில் பொதுவாக எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றன.
விமானத்தில், காற்றழுத்தம் நிறைந்த பயணிகள் அமரும் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க இந்தச் செயல்முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், போன்களை சார்ஜ் செய்யும் பவர்பேங்க் பயன்படுத்துவதில் மட்டும் குழப்பமான செயல்முறையே மிஞ்சுகிறது.
சில விமானங்களில் பவர்பேங்க் கைப்பையில் வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை செக் இன் பைகளில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால் சில விமான நிறுவனங்கள் பவர்பேங்க்கைக் கைப்பையில் வைக்க அனுமதிக்கின்றன. ஒவ்வொரு விமான நிறுவனத்தைப் பொறுத்தும் இந்த விதிகள் மாறி வருகின்றன.
குறிப்பாக, குறிப்பாக கடந்த அக்டோபர் 19 அன்று தில்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருந்த பவர்பேங்க் திடீரெனத் தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் கடந்த வாரம் சீனாவிலிருந்து தென் கொரியா சென்ற ஏர் சீனா விமானத்தில் லித்தியம் பேட்டரி தீப்பிடித்ததால், பயணிகளின் பாதுகாப்புக்காக விமானம் சாங்காய் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளால் ஆன பவர்பேங்க்களை விமானத்தில் பயன்படுத்துவது மற்றும் கொண்டு செல்வது குறித்த கடுமையான விதிகளை உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது. தில்லியில் நடந்த விபத்துக்குப் பிறகு, இதுகுறித்தான தொழில்நுட்ப ஆலோசனைகளை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த அக்டோபர் 1 முதல் எமிரேட்ஸ் விமான நிறுவனம் விமானத்தில் பவர்பேங்க் பயன்படுத்த முற்றிலும் தடை விதித்தது. அதேபோல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தத் தடையை அமல்படுத்தி வருகிறது. இதையடுத்து விரைவில் விமானங்களில் பவர்பேங்க் கொண்டு செல்லலாமா என்ற பயணிகளின் தீராத சந்தேகத்திற்கு அதிகாரப்பூர்வ தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Directorate General of Civil Aviation is holding discussions to formulate stricter regulations on the use of power banks on aircrafts.