
மஹாராஷ்டிரத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 132 இடங்கள், சிவசேனை 57 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்கள் என கூட்டணியாக மொத்தம் 288 இடங்களில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இதுதவிர 7 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இருந்தபோதிலும், மஹாராஷ்டிர முதல்வர் யார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் இல்லாமல் இருந்து வந்தது. மூன்று கட்சிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம் என தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். மஹாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சிக்கு தான் எந்தவொரு தடையாகவும் இருக்க மாட்டேன், பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவு இறுதியானது என ஏக்நாத் ஷிண்டே கூறினார். இவற்றின் தொடர்ச்சியாக பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் மஹாராஷ்டிரத்தின் முதல்வர் வேட்பாளராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகின.
கடந்த ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக இருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தேவேந்திர ஃபட்னவீஸும், ஏக்நாத் ஷிண்டேவும் ஒரு வார காலத்தில் முதல்முறையாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்கள். இதன் முடிவில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை கூடியது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் பெயரை பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முன்மொழிந்தார். பங்கஜா முண்டே இதை வழிமொழிந்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக மேலிடக் கண்காணிப்பாளர் விஜய் ரூபானி அறிவிக்கையில், வேறு யார் பெயரும் முன்மொழியப்படாததால், தேவேந்திர ஃபட்னவீஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ். புதிய ஆட்சியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.