தில்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்

பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர யாதவுக்குக் கூடுதல் பொறுப்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியுடன் தேவேந்திர யாதவ் (கோப்புப்படம்)
ராகுல் காந்தியுடன் தேவேந்திர யாதவ் (கோப்புப்படம்)ANI

தில்லி காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி காங்கிரஸ் தலைவராக கடந்தாண்டு ஆகஸ்டில் நியமிக்கப்பட்ட அரவிந்தர் சிங் லவ்லி இரு நாள்களுக்கு முன்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், நிர்வாகிகள் நியமனத்துக்கு தலைமையில் இருந்து அனுமதி கிடைப்பதில்லை, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததில் உடன்பாடில்லை எனப் பல்வேறு விஷயங்களை அரவிந்தர் சிங் லவ்லி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர யாதவுக்குக் கூடுதல் பொறுப்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் தில்லி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக உடனடியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தில் அரவிந்தர் சிங் லவ்லி எழுதியதாவது:

"தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக நான் நியமிக்கப்பட்டதிலிருந்து தில்லி காங்கிரஸ் கமிட்டியில் மூத்தவர்களுக்குப் பதவிகளை வழங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் (தில்லி பொறுப்பு) என்னை அனுமதிக்கவில்லை. மிக மூத்த தலைவர் ஒருவரை ஊடகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பதற்கான எனது பணி நியமன உத்தரவு அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டது. இதுவரை தில்லியில் வட்டத் தலைவர்களை நியமிக்கக்கூட பொதுச்செயலாளர் என்னை அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக தில்லியில் 150 வட்டங்கள் தலைவரே இல்லாமல் இருக்கின்றன.

காங்கிரஸுக்கு எதிராகப் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தொடங்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததில் தில்லி காங்கிரஸுக்கு விருப்பமில்லை. காங்கிரஸுக்கு எதிராகப் பொய் குற்றச்சாட்டுகளை வைத்த அந்தக் கட்சியின் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இன்று சிறையிலிருக்கிறார்கள். இருந்தபோதிலும், தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கட்சி முடிவு செய்துள்ளது.

கட்சியின் இறுதி முடிவை நாங்கள் மதிக்கிறோம். இந்த முடிவுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவது மட்டுமின்றி, கட்சித் தலைமையின் உத்தரவுக்கிணங்க, தில்லி காங்கிரஸ் பிரிவு முழுமையாக செயல்படுவதையும் உறுதி செய்திருக்கிறேன்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) அறிவுறுத்தலுக்கிணங்க, எனது நிலைப்பாட்டுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட இரவு, நான் அவரது இல்லத்துக்குச் சென்றேன்.

கட்சித் தொண்டர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாதபோதும், தலைவர் பதவியை வகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in