33 புதுமுகங்கள்: மோடி 3.0 அமைச்சரவையின் முக்கிய அம்சங்கள்!

முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 34 அமைச்சர்களுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
33 புதுமுகங்கள்: மோடி 3.0 அமைச்சரவையின் முக்கிய அம்சங்கள்!
ANI

நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

மோடியின் 3-வது அமைச்சரவையின் முக்கிய அம்சங்கள்:

* மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட 72 பேர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள் (25 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்).

* அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

* 72 பேரில் 39 பேர் இதற்கு முன்பு அமைச்சராகப் பதவி வகித்தவர்கள்.

* ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்குர் என முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 34 அமைச்சர்களுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.

* அமைச்சரவையில் மொத்தமாக 33 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சரவையில் 8 புதுமுகங்கள். ஷிவ்ராஜ் சிங் செளகான், மனோஹர் லால் கட்டர், குமாரசாமி, ஜிதன் ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், ராம் மோகன் நாயுடு, சிராக் பஸ்வான், சிஆர் பாட்டீல்.

* மக்களவையில் உறுப்பினராக அல்லாத 13 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். தேர்தலில் தோற்ற எல். முருகனும் நவ்னீத் சிங் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

* மத்திய அமைச்சரவையில் 27 பேர் ஒ.பி.சி. பிரிவினர், 10 பட்டியலின மக்கள், 5 பட்டியலினப் பழங்குடியினர், 5 சிறுபான்மையினர்.

* முன்னாள் முதலமைச்சர்கள் ஷிவ்ராஜ் சிங் செளகான் (மத்தியப் பிரதேசம்), மனோஹர் லால் கட்டர் (ஹரியாணா), ஜிதன் ராம் மஞ்சி (பீஹார்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), சர்வானந்த சோனோவால் (அஸ்ஸாம்), எச்.டி. குமாரசாமி (கர்நாடகம்) உள்ளிட்ட 6 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். குஜராத் முன்னாள் முதலமைச்சர் மோடியுடன் சேர்த்தால் 7 பேர்.

* அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர்களில் குமாரசாமியும் (ஜேடி எஸ்), ஜித்தன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா) ஆகிய இருவரும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

* முந்தைய மத்திய அமைச்சரவையில் 10 பெண்கள் பதவி வகித்தார்கள். இம்முறை 2 கேபினட் அமைச்சர்கள் உள்பட 7 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

* கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு தலா இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாட்டிலிருந்து எல். முருகன் மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மேலும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய தமிழர்களும் அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள்.

* 3 கேபினட் அமைச்சர்கள் உள்பட கர்நாடகத்துக்கு 5 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* ஒரு கேபினட் அமைச்சர் உள்பட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

* கேரளத்தின் முதல் பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

* 36 வயது ராம்மோகன் நாயுடு, இளம் அமைச்சர். 79 வயது ஜிதன் ராம் மஞ்சி, மூத்த அமைச்சர்.

* அஜித் பவார் தரப்பைச் சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இருந்துள்ளதால், இது தகுதிக்குறைவாக இருக்கும் என்று கருதுவதாகக் கூறி வாய்ப்பை மறுத்துள்ளார் அஜித் பவார்.

* மோடியின் அமைச்சரவையில் இஸ்லாமியர் யாரும் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in